பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள், எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், பாமக இளைஞரணித் தலைவர் தமிழ்க்குமரன் மற்றும் எம்.எல்.ஏ. அருள் ஆகியோர் நிச்சயம் போட்டியிடுவார்கள் என்று உறுதிபட அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தக் கட்சி ரீதியான முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். மேலும், இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார். அவரது இந்தப் பேச்சு சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து பாமகவின் ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்டதைக் காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இட ஒதுக்கீடு போராட்டம் குறித்து இராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ள அதே வேளையில், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது புதல்வர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவைத் தீர்த்து, இரு தரப்பினரையும் ஒன்றிணைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. என்.டி.ஏ. கூட்டணியில் பா.ம.க.வின் பலம் மிகவும் முக்கியமாகக் கருதப்படுவதால், சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து, கூட்டணிக்குள் எந்தவிதமான பிளவும் இருக்கக் கூடாது என்பதில் என்.டி.ஏ. தலைமை அதிக கவனம் செலுத்துவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
