அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளரான, முன்னாள் எம்.பி. சத்தியபாமா, நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக நம்பகமான தகவல்கள் வெளியாகி உள்ளன. செங்கோட்டையன் ஆதரவாளர்கள் பலர் ஏற்கனவே அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், இந்தத் தகவல் ஈரோடு மாவட்டத்தில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகியாக இருந்த செங்கோட்டையன் வருகிற நவம்பர் 28-ஆம் தேதி நடிகர் விஜய் முன்னிலையில் முறைப்படி த.வெ.கா.வில் இணையவிருப்பதாகக் கூறப்படுகிறது. செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைவது உறுதியானால், அவரது ஆதரவாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் பல்வேறு நிலை நிர்வாகிகள் எனப் பலரும் திரளாகப் பிரிந்துவந்து த.வெ.கா.வில் இணைய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க.வில் அதிருப்தியில் இருந்த செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் பலரை அ.தி.மு.க. தலைமை ஏற்கனவே கட்சியை விட்டு நீக்கியது குறிப்பிடத்தக்கது. செங்கோட்டையனின் இந்த முக்கிய முடிவும், அவரது ஆதரவாளர்களின் இணைவும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அரசியல் களத்தில் புதிய பலத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
