இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு 16 வயதில் தலையில் ஏற்பட்ட விபத்துக் காயம் காரணமாக நினைவாற்றல் இழப்பு ஏற்பட்டு, 45 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நினைவு திரும்பியதால் அவர் தனது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்.

இமாச்சலப் பிரதேசம், சிர்மௌர் மாவட்டம், நாடி கிராமத்தைச் சேர்ந்த ரிக்கி ராம்  என்பவருக்கு 1980-ஆம் ஆண்டு, 16 வயதாக இருந்தபோது ஒரு விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதன் விளைவாக அவர் தனது நினைவாற்றலை முழுவதுமாக இழந்து, வீட்டை விட்டு வெளியேறி மகாராஷ்டிராவின் நாந்தேடுக்குச் சென்றுள்ளார். அவர் எங்கும் காணப்படாததால், அவரது குடும்பத்தினர் அவர் உயிரிழந்துவிட்டதாகக் கருதியிருந்தனர்.

மகாராஷ்டிராவை அடைந்த ரிக்கி ராம், அங்கு ரவி சௌத்ரி என்ற புதிய பெயருடன் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கினார். ஹரியானா, மும்பை போன்ற நகரங்களில் சில காலம் வேலை செய்த பின்னர், நாந்தேடில் உள்ள ஒரு கல்லூரியில் வேலை கிடைத்தது.

1994-ஆம் ஆண்டு சந்தோஷி என்ற பெண்ணை மணந்து, இரண்டு மகள்கள், ஒரு மகனுடன் குடும்பம் நடத்தினார். அவரது கிராமத்தின் காட்சிகள் மட்டும் அவ்வப்போது அவரது கனவுகளில் தோன்றி மறைந்துள்ளன. தலைக் காயத்தால் நினைவாற்றலை இழந்திருந்தாலும், ரவி சௌத்ரி தனது புதிய குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ரவி சௌத்ரிக்கு மீண்டும் தலையில் காயம் ஏற்பட்டது. ஆச்சரியப்படும் விதமாக, அந்தக் காயம் அவரது பழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தது. தனது கிராமம், குடும்பம் குறித்த பழைய நினைவுகள் அவரது மனதில் வெள்ளம் போலப் பாய்ந்தன.

இந்தக் குடும்ப நினைவுகளின் உதவியுடன், அவர் 45 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தாய்மண்ணை அடைந்தார். அவர் இறந்துவிட்டதாகக் கருதிய அவரது குடும்பத்தினர், ரிக்கியைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டனர். அவரது 45 ஆண்டு கால மர்மம் நீங்கி, குடும்பத்தினர் மீண்டும் இணைந்த இந்தக் கதை உண்மையிலேயே ஒரு திரைப்படத்திற்குக் குறையாதது.