கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள BRG மாதேப்பள்ளியைச் சேர்ந்த 49 வயதான சென்னகேசவன் என்பவர், நவம்பர் 19ஆம் தேதி காலையில் தன் வீட்டின் முன் ஓர் ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்களிடம் கூறியுள்ளார். தகவல் அறிந்து வந்த கந்திகுப்பம் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர்.

விசாரணையில், இறந்தவர் ஊத்தங்கரை  பகுதியைச் சேர்ந்த கணேசன் என்றும், இவர் கேபிள் ஆப்பரேட்டராக வேலை செய்தவர் என்றும், சென்னகேசவன் மற்றும் கணேசன் இருவரும் நண்பர்கள் என்றும் தெரியவந்தது.

கணேசன் ஏற்கெனவே 2014-ல் தன் மனைவி கல்பனாவை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்தவர். நண்பர்களான கணேசனும் சென்னகேசனும் அடிக்கடி சந்தித்து மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். கடந்த வாரம் BRG மாதேப்பள்ளிக்கு வந்த கணேசன், சென்னகேசவனுடன் தங்கி மது அருந்தியுள்ளார்.

நவம்பர் 16ஆம் தேதி, இருவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு பிரியாணி சாப்பிட்டபோது, பிரியாணி இலையில் இருந்து கீழே சிதறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சென்னகேசவன், கணேசனை கன்னத்தில் அறைந்துள்ளார். மது போதையில் இருந்த கணேசன் கீழே விழுந்துள்ளார். சென்னகேசவன் அவரை காலால் எட்டி உதைத்ததில் கணேசன் உயிரிழந்துள்ளார்.

பின்னர், சென்னகேசவன் இரவோடு இரவாக வீட்டின் வளாகத்திலேயே ஒன்றரை அடி ஆழத்தில் குழி தோண்டி கணேசனின் உடலைப் புதைத்துள்ளார். ஆனால், கனமழை காரணமாகப் புதைக்கப்பட்ட உடல் வெளியே தெரிய ஆரம்பித்ததுடன் துர்நாற்றமும் வீசத் தொடங்கியது. இதனால், புதன்கிழமை அதிகாலையில் அந்த உடலை எடுத்து வீட்டு காம்பவுண்டிற்கு வெளியே போட்டுவிட்டு, எதுவும் தெரியாததுபோல் ஊர் மக்களிடமும், காவல் துறையினரிடமும் தகவல் கூறியுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.