அன்புமணி ராமதாஸ் அவர்கள், திமுக அரசின் முகமூடியும், மோசடி வலையும் கிழியத் தொடங்கி விட்டதாகக் கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் காலணி தயாரிக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் வெறும் 52 வேலை காலியிடங்களுக்கு விண்ணப்பங்களைப் பெற இன்று பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும், இளம்பெண்களும் திரண்டதைக் சுட்டிக் காட்டி அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நிறுவனத்தில் ஊதியம் குறைவாக இருந்தாலும், அந்த வேலையாவது கிடைக்காதா என்ற நம்பிக்கையில் இவ்வளவு பேர் திரண்டிருப்பது, தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் எந்த அளவுக்கு உள்ளது என்பதைக் காட்டுவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திமுக அரசு தாங்கள் ரூ.11.32 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாகவும், அதன் மூலம் 34 லட்சம் பேருக்கு வேலை வழங்கியுள்ளதாகவும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) தரவுகளின் அடிப்படையில் 30 லட்சம் வேலைகள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறிவந்த பொய் அம்பலமாகிவிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

போச்சம்பள்ளியில் வேலை கேட்டுத் திரண்ட இந்தக் கூட்டமே தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பு குறித்த உண்மையான நிலையை உணர்த்துகிறது. படித்த இளைஞர்கள் மீது அக்கறை இல்லாதது திமுக அரசு என்றும், வேலை கேட்டு இன்று திரண்ட இந்த இளைஞர்கள் சக்தி வெகு விரைவில் திமுக அரசை விரட்டியடிக்கத் திரளும் என்றும், அப்போது பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டு இளைஞர்களுக்குப் புதியதோர் தமிழகத்தை உருவாக்கும் என்றும் அன்புமணி ராமதாஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.