அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் ஆந்திராவைச் சேர்ந்த சசிகலா நர்ரா (38) மற்றும் அவரது மகன் அனிஷ் (6) ஆகியோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த மர்மம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
2017ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி மாப்பிள் ஷேடில் உள்ள ஃபாக்ஸ் மெடோ குடியிருப்பில் கத்தியால் குத்தப்பட்டு தாயும் மகனும் இறந்து கிடந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணை அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருந்து பல ரத்தக் கறை மாதிரிகளைச் சேகரித்தனர்.
அதில் ஒரு துளி ரத்தம் பாதிக்கப்பட்டவர்களுக்கோ அல்லது கணவர் ஹனு நர்ராவிற்கோ சொந்தமானது அல்ல என்று தெரியவந்தது. இந்தக் கொலையில் ஹனு நர்ராவின் முன்னாள் அலுவலக நண்பரான நாசீன் ஹமீது என்பவர் மீது சந்தேகம் எழுந்தது. கொலை நடந்த பிறகு இந்தியாவுக்குத் தப்பி வந்த இவர், இதற்கு முன்பு ஹனு நர்ராவைத் தொந்தரவு செய்ததாகப் புகார் இருந்தது.
சந்தேகப் பட்டியலில் இருந்த நாசீன் ஹமீது டிஎன்ஏ மாதிரியைக் கொடுக்க மறுத்த நிலையில், அமெரிக்க அதிகாரிகள் சற்றும் தளரவில்லை. 2024ஆம் ஆண்டில் நீதிமன்ற உத்தரவு பெற்று, ஹமீது பயன்படுத்திய காக்னிஸன்ட் டெக்னாலஜீஸ் கம்பெனி லேப்டாப்பைத் தருவித்தனர்.
அந்த லேப்டாப்பில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரி, சம்பவ இடத்தில் கிடைத்த அடையாளம் தெரியாத ரத்தத் துளியுடன் ஒத்துப்போனது, இதன் மூலம் ஹமீதின் தொடர்பு உறுதியானது. இதையடுத்து, அமெரிக்க அதிகாரிகள் நாசீன் ஹமீது மீது கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அவரை அமெரிக்காவிற்குக் கொண்டு வந்து வழக்குத் தொடர இந்தியாவிடம் ஒப்படைக்கக் (Extradition) கோரி சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
ஹமீதின் நோக்கம் தெளிவாகத் தெரியாவிட்டாலும், ஹனு நர்ரா மீதான தனிப்பட்ட கோபமே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
