டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் பயங்கரவாத சதியால் அரங்கேறியது என புலனாய்வு அதிகாரிகள் உறுதி செய்தனர். இந்தச் சம்பவத்தில் பலி எண்ணிக்கை  15 ஆக அதிகரித்துள்ளது.குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட காரை வழங்கியதாக அமீர் ரஷீத் அலி என்பவர் கைது செய்யப்பட்டார்.

சதித்திட்டம் தொடங்கியபோதே பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த அவர், முக்கியக் குற்றவாளி டாக்டர் அமர் தங்குவதற்கு இடமும் வழங்கியுள்ளார்.  டெல்லி பட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அமீர் ரஷீத் அலியை 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க என்.ஐ.ஏ.வுக்கு நீதிபதி அனுமதி அளித்தார்.

இதற்கிடையே, குண்டுவெடிப்பில் தொடர்புடைய டாக்டர் உமர் பணியாற்றிய அரியானா மாநிலத்தின் அல்பலா பல்கலைக்கழகத்தின் இணையப் பக்கத்தில், அங்கீகாரம் தொடர்பாக தவறான தகவல்கள் இருந்ததாக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) விளக்கம் கேட்டது.

பயங்கரவாத விசாரணை மற்றும் அங்கீகார முரண்பாடுகள் காரணமாக அல்பலா பல்கலைக்கழகத்தின் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் 2 தனி வழக்குகளைப் பதிவு செய்து, அதன் தலைவர் ஜாவேத் அகமது சித்திக்கை ஆஜராக சம்மன் அனுப்பினர்.

இந்த நிலையில், அல்பலா பல்கலைக்கழகத்தின் குழுமத் தலைவர் ஜவாத் அகமது சித்திக்கை அமலாக்கத்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது. அல்பலா பல்கலைக்கழகம் யு.ஜி.சி. அங்கீகாரத்தைப் பொய்யாகக் கோரியுள்ளது, மேலும் யு.ஜி.சி. மானியங்களைப் பெற தகுதியற்றது என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.