உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த மனு ஸ்ரீவஸ்தவா என்பவர், புற்றுநோயால் அவதிப்படும் தனது 21 வயது மகன் அன்ஷ் ஸ்ரீவஸ்தவாவைக் காப்பாற்ற, ரஷ்ய அரசுக்கு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் கிடைக்காத புற்றுநோய் தடுப்பூசியின் மருத்துவப் பரிசோதனையைத் (Trial) தனது மகன் மீது நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார். இது குறித்துப் பேசிய மனு ஸ்ரீவஸ்தவா, “என் மகனுக்கு நான்காம் நிலை புற்றுநோய் இங்கே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, ஆனால் பலன் உறுதியாக இல்லை.
ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ஒரு தடுப்பூசி புற்றுநோய்க்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக அறிந்தேன். இந்திய அரசுக்கும், ரஷ்ய அரசுக்கும் கடிதம் எழுதினேன். எனது கோரிக்கை பரிசீலனையில் இருப்பதாகவும், இது குறித்து ரஷ்ய சுகாதாரத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பதில் கிடைத்தது” என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
மனு ஸ்ரீவஸ்தவா பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய சுகாதார அமைச்சர் மற்றும் ரஷ்ய, தென் கொரிய உயர் அதிகாரிகளுக்கும் தனது மகன் அன்ஷை ரஷ்யாவில் உருவாக்கப்படும் புற்றுநோய் தடுப்பூசி பரிசோதனையில் சேர்க்கக் கோரி கடிதம் எழுதியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த இந்திய அரசு, “தற்போது ரஷ்யாவில் தயாரிக்கப்படும் இந்தத் தடுப்பூசி அங்குக் கொண்டு வரப்படுபவர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் எந்த நாட்டிற்கும் பரிசோதனைக்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளது.
இருப்பினும், ரஷ்யக் கூட்டாட்சி மருத்துவ மற்றும் உயிரியல் ஏஜென்சியின் (FMBA) தலைவர் வெரோனிகா ஸ்க்வோர்ட்சோவா, இந்தக் கேன்சர் தடுப்பூசி வெற்றிகரமாக மருத்துவத்துக்கு முந்தைய பரிசோதனைகளை முடித்து, 60% முதல் 80% வரை கட்டிகளின் வளர்ச்சியைக் குறைப்பதில் பாதுகாப்பையும், அதிக செயல்திறனையும் நிரூபித்துள்ளதாகப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
