மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், வெறும் 10ஆம் வகுப்பு வரை படித்த விவேக் யாதவ் (21) என்ற இளைஞர் ஒருவர், யூடியூப் வீடியோக்கள் மற்றும் புத்தகங்களைப் பார்த்துத் தனியாகக் கற்றுக்கொண்டு, வீட்டிலேயே ஒரு முழுமையான கள்ளநோட்டு அச்சடிக்கும் தொழிற்சாலையை நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குற்றப் பிரிவினர் மற்றும் பிப்லானி காவல்துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், பள்ளிக்கு அருகில் கள்ள ரூ.500 நோட்டுகளைப் புழக்கத்தில் விட முயன்ற விவேக் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டார். அவரிடமிருந்து பல கள்ள ரூ.500 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விவேக்கின் வாடகை வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது, அதிர்ச்சியூட்டும் பல கருவிகளைக் கைப்பற்றினர். அவரது அறையில் அதிநவீன வண்ண லேசர் பிரிண்டர்கள், துல்லியமான ஸ்கேனர்கள், இறக்குமதி செய்யப்பட்ட பளபளப்பான காகிதங்கள், சிறப்பு மை, கட்டிங் பிளேடுகள், கள்ளநோட்டுகளை வடிவமைப்பதற்கான பிரத்யேக மென்பொருட்கள் மற்றும் முடிக்கப்படாத கள்ளநோட்டுக் கட்டுகள் ஆகியவை சிக்கின.
அவர் இதுவரை 23 கள்ள ரூ.500 நோட்டுகளை அச்சடித்திருந்ததோடு, மேலும் நூற்றுக்கணக்கான நோட்டுகளை அச்சிடுவதற்கான மூலப்பொருட்களையும் தயாராக வைத்திருந்திருக்கிறார். அசல் நோட்டை ஸ்கேன் செய்து, வாட்டர்மார்க், நிழல்கள், பாதுகாப்பு நூல் போன்ற அம்சங்களைச் சாமர்த்தியமாகத் திருத்தி, உண்மையான நோட்டு போன்ற அமைப்பைப் பிரதிபலிக்கும் காகிதத்தில் அச்சிட்டதாக விசாரணையில் விவேக் ஒப்புக்கொண்டார்.
ஆன்லைன் தளங்கள் மற்றும் உள்ளூர் சந்தைகளில் இருந்து மை, காகிதம் உள்ளிட்ட பொருட்களை வாங்கி இந்தக் குற்றத்தைச் செய்ததாக விவேக் விசாரணையில் தெரிவித்துள்ளார். இந்தப் பிடிபட்ட கள்ளநோட்டுக் கும்பல், கடந்த இரண்டு மாதங்களில் மத்தியப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது பெரிய கள்ளநோட்டுக் கும்பல் ஆகும்.
