சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பி.காம். முடித்த இளம்பெண் ஒருவருடன், ‘மோஜ்’ என்ற செயலி மூலமாகப் பழக்கம் ஏற்பட்ட இளைஞர், அவரை ஆபாசப் புகைப்படங்களைக் காட்டி மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிபின் ராஜ் (வயது 25) என்ற கன்னியாகுமரியைச் சேர்ந்த அந்த ஆட்டோ ஓட்டுநர், சுமார் 4 மாதங்களுக்கு முன்பு இந்த இளம்பெண்ணுடன் ஆன்லைனில் அறிமுகமானார்.
முதலில் நட்பாகப் பழகிய லிபின் ராஜ், பின்னர் காதல் வலைவிரித்துள்ளார். இருவரும் வீடியோ காலிலும் பேசியுள்ளனர். அப்போது, அந்த இளம்பெண்ணின் ஆபாசப் புகைப்படங்களை லிபின் ராஜ் எடுத்து வைத்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம், லிபின் ராஜ் அந்தப் புகைப்படங்களைக் காட்டி, “நான் சொல்வதைக் கேட்காவிட்டால், புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன்” என்று மிரட்டியுள்ளார். இதற்குப் பயந்துபோன இளம்பெண், லிபின் ராஜ் சொன்னபடி பெரியமேட்டில் உள்ள லாட்ஜுக்குச் சென்றுள்ளார்.
அங்கு லிபின் ராஜ் அவரை வலுக்கட்டாயமாகப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பிறகு, பலமுறை அதேபோல மிரட்டி லாட்ஜுக்கு வரவழைத்துத் தவறாக நடந்துள்ளார். மூன்றாவது முறையாக லாட்ஜுக்கு வர மறுத்தபோது, ஆத்திரமடைந்த லிபின் ராஜ், இளம்பெண்ணின் ஆபாசப் புகைப்படங்களை அவரது தாயாரின் செல்போனுக்கு அனுப்பி உள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய், மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், நம்பிக்கை மோசடி, பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், கன்னியாகுமரிக்கு விரைந்து சென்று லிபின் ராஜைக் கைது செய்தனர். மேலும், இவன் வேறு பெண்களிடமும் இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளாரா என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது.
