உத்தரப்பிரதேசம், கோரக்பூரில் உள்ள குலாரியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கணவரின் அநாகரிகச் செயல்களைக் கேள்வி கேட்ட மனைவியை, அவர் சரமாரியாகத் தாக்கி, ‘விவாகரத்து’ செய்வதாக கூறி குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 33 வயதான பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, அவரது கணவர் ஆரம்பம் முதலே அநாகரிக வீடியோக்களையும், ஆபாசப் படங்களையும் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு இது தெரியவந்ததாகவும், அவருக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். முன்பு ஒருமுறை இதுகுறித்து எதிர்ப்பு தெரிவித்து மனைவி தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றபோது, கணவர் தனது தவறை உணர்ந்து அழைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு கணவரின் கைப்பேசியில் பல பெண்களுடன் இருக்கும் அநாகரிக வீடியோ கிளிப்புகளை அவர்களின் 14 வயது மகன் தற்செயலாகப் பார்த்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மகன், தந்தையிடம் இதுபற்றி விசாரித்தபோது, அவர் மகனை மிரட்டிச் சத்தம் போடாமல் இருக்க அறிவுறுத்தியுள்ளார். அன்று முதல் அந்த மகன் மனச்சோர்வுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. இதைக் கேள்விப்பட்ட மனைவி, கணவரிடம் இதுபற்றி விசாரித்தபோது, அவர் ஆத்திரமடைந்து, “நான் என்ன செய்தாலும் உனக்கு என்ன வந்தது?” என்று கூறி, மனைவியை கடுமையாகத் தாக்கி, மூன்று முறை ‘முத்தலாக்’ கூறி, குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
