ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், பெண்டுர்த்தி அப்பன்னபாலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி கனக மகாலட்சுமி (66). இவர் தனது மகன் சுப்பிரமணிய சர்மா, மருமகள் லலிதா ஆகியோருடன் வசித்து வந்த நிலையில், ஜெயந்தி கனக மகாலட்சுமி தனது மருமகள் லலிதாவைத் தேவையில்லாமல் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அடிக்கடித் தொல்லைகள் கொடுத்து வந்த மாமியார் மீது கடுங்கோபத்தில் இருந்த லலிதா, எப்படியாவது மாமியாரைத் தீர்த்துக்கட்ட வேண்டும் என்று திட்டமிட்டார்.
அதன்படி, ஒரு பாட்டிலில் பெட்ரோலை வாங்கி வந்து வீட்டில் மறைத்து வைத்திருந்தார். சம்பவத்தன்று, கணவர் வேலைக்குச் சென்ற பிறகு, குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற பிறகு, வீட்டில் லலிதாவும் அவரது மாமியாரும் மட்டுமே இருந்தனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட லலிதா, மாமியாரை முதலில் கயிற்றால் கட்டி, பிறகு கண்ணைக் கட்டினார். பயந்துபோன ஜெயந்தி கனக மகாலட்சுமி, “என்னை எதுவும் செய்துவிடாதே” என கெஞ்சியபோதும், ஆத்திரத்தில் இருந்த லலிதா, மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து வந்து மாமியார் மீது ஊற்றித் தீ வைத்தார்.
உடல் முழுவதும் தீப் பற்றியதால், ஜெயந்தி கனக மகாலட்சுமி வலியால் அலறித் துடித்து, சிறிது நேரத்திலேயே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முதலில், கணவரிடம் “எதிர்பாராத விதமாகத் தீ விபத்து நடந்துவிட்டது” என்று லலிதா நாடகமாடியுள்ளார். இருப்பினும், சந்தேகம் அடைந்த போலீஸார், லலிதாவைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தியதில், மாமியார் தன்னைத் துன்புறுத்தியதால் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து, போலீஸார் கொலை வழக்காகப் பதிவு செய்து, லலிதாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
