கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே உள்ள ராமன்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுஜின் (35) என்பவர், கடந்த ஏழு ஆண்டுகளாகக் காதலித்த இளம்பெண் தன்னை ஏமாற்றிவிட்டதாகப் புதுக்கடை காவல் நிலையத்தில் அளித்த புகார், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனவரான சுஜின், தனது காதலியின் ஆசையை நிறைவேற்ற கத்தார் நாட்டிற்குச் சென்று மீன்பிடி தொழில் செய்து, அந்த வருமானத்தில் காதலியை ஒரு நல்ல கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படிக்க வைத்துள்ளார்.

படிப்பிற்கான கல்விக் கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்காக, வெளிநாட்டில் இருந்தபடியே ஜிபே மற்றும் வங்கிக் கணக்குகள் மூலம் பல்வேறு தவணைகளில் சுஜின் பணம் அனுப்பி வந்துள்ளார். இதற்கிடையே, கடந்த 2023ஆம் ஆண்டு ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் வைத்து இருவரும் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர், காதலியின் சகோதரிக்குத் திருமணம் ஆகும் வரை, ரகசியமாக இருப்போம் என்று காதலி கேட்டுக்கொண்டதன்படி சுஜின் மீண்டும் கத்தார் நாட்டிற்குச் சென்றுவிட்டார்.

காதலன் அனுப்பிய பணத்தில் படிப்பை முடித்த அந்தப் பெண், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இந்நிலையில், சகோதரி திருமணம் முடிந்ததால், மனைவியுடன் சேர்ந்து வாழும் ஆசையில் சுஜின் ஊருக்குத் திரும்பியபோது, மனைவி சம்மதம் தெரிவிக்காமல் தயக்கம் காட்டியுள்ளார். சந்தேகத்தின்பேரில் விசாரித்தபோது, பெங்களூருவில் தனது மனைவி வேறு ஒரு ஆணுடன் நெருங்கிப் பழகுவது சுஜினுக்குத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, திருமண வீடியோ காட்சிகள், வாட்ஸ் அப் உரையாடல் பதிவுகள், பணம் அனுப்பியதற்கான ஆவணங்கள், மற்றும் காதலி வேறு ஆணுடன் இருக்கும் புகைப்படங்கள் ஆகியவற்றுடன் சுஜின் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இந்தப் புகாரின்பேரில், குழித்துறை நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.