உலகளவில் சுமார் பாதிக்கும் மேற்பட்ட மக்களைப் பாதிக்கும் மிகப் பெரிய பிரச்னைகளில் ஒன்று பற்சிதைவு. இதற்கான சிகிச்சைக்காக ஆண்டுதோறும் சுமார் $544 பில்லியன் செலவிடப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பற்சிதைவு பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு ஓர் ஆறுதல் அளிக்கும் செய்தி கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டே சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் ஒரு முன்னோடி சிகிச்சை முறை மூலம், பற்களில் பாதிக்கப்பட்ட எனாமல் பகுதியை மீண்டும் வளரச் செய்து, பற்களைப் பழுதுபார்க்க முடியும் என நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வுக்கு உலகெங்கிலும் உள்ள ஆய்வாளர்களும் பங்களிப்பு செய்துள்ளனர். தற்போதுள்ள சிகிச்சை முறைகளில் எனாமலை திறம்பட மீண்டும் உருவாக்க தீர்வு எதுவும் இல்லை என்ற குறையைப் போக்கும் விதமாக இந்த புதிய புரத அடிப்படையிலான ஜெல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஜெல் பாதுகாப்பானது, எளிதில் மற்றும் விரைவாகப் பயன்படுத்தக்கூடியது என்று பயோமெடிக்கல் இன்ஜினியரிங் மற்றும் பயோமெட்டீரியல்ஸ் துறையின் தலைவர் பேராசிரியர் ஆல்வரோ மாதா தெரிவித்துள்ளார். தற்போது பல் மருத்துவர்கள் ஃப்ளோரைடு சிகிச்சைகள் அளிப்பது போலவே, இந்த ஜெல்லைப் பற்களில் பயன்படுத்தலாம். இதற்கு சிகிச்சை அறை தேவையில்லை, சில நிமிடங்களில் முடிந்துவிடும். இது குழந்தைப் பருவத்தில் எனாமல் வளர்ச்சியை வழிநடத்தும் இயற்கையான புரதங்களின் அம்சங்களை நகலெடுப்பதன் மூலம் செயல்படுகிறது.

பல் துலக்குதல், மெல்லுதல் மற்றும் அமில உணவுகளுக்கு வெளிப்படுதல் போன்ற ‘நிஜ வாழ்க்கை’ சூழ்நிலைகளை உருவகப்படுத்தி செய்யப்பட்ட சோதனைகளிலும், மீண்டும் உருவாக்கப்பட்ட எனாமல் ஆரோக்கியமான எனாமலைப் போலவே செயல்படுவதாக ஆய்வின் முன்னணி ஆசிரியர் டாக்டர் அப்ஷர் ஹசன் உறுதிப்படுத்தியுள்ளார். இதை வணிகமயமாக்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு முதல் தயாரிப்பை சந்தையில் கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.