டெட்ராய்ட் போலீஸ் அதிகாரி ஒருவர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த நீதிமன்ற விசாரணையில் பேண்ட் இல்லாமல் தோன்றி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட் 36வது மாவட்ட நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடந்த இந்த மெய்நிகர் விசாரணையில், அதிகாரி மேத்யூ ஜாக்சன் போலீஸ் சீருடை சட்டை மட்டும் அணிந்திருந்தார்.

கீழே ஷார்ட்ஸ் போன்ற உள்ளாடை மட்டுமே இருந்ததைப் பார்த்த நீதிபதி சீன் பி. பெர்கின்ஸ், “அதிகாரி, பேண்ட் போட்டிருக்கீங்களா?” எனக் கேட்டார். அதற்கு ஜாக்சன், “இல்லை ஐயா” எனப் பதிலளித்துவிட்டு, கேமராவை மேலே திருப்பி இடுப்புக்கு மேல் மட்டும் காட்டினார்.

நீதிமன்ற விதிமுறைகளின்படி, மெய்நிகர் விசாரணையிலும் தொழில்முறை உடையே கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து டெட்ராய்ட் போலீஸ் தலைவர் டாட் பெட்டிசன், “எங்கள் அதிகாரிகள் நீதிமன்றத்தில் கண்ணியமாகவும் தொழில்முறையாகவும் நடந்துகொள்ள வேண்டும்.

இந்தச் சம்பவம் துறையின் தரத்துக்கு ஏற்றதல்ல, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் தாட்டானிஷா ரீட், “போலீஸ் அதிகாரியே இப்படியா என அதிர்ச்சியாக இருந்தது” எனக் கூறினார்.