அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில், 39 வயது ஜெசிகா மௌத் என்ற பெண், ஆறு ஆண்டுகளுக்குள் நான்கு குழந்தைகளை தனது குளியலறையில் பிரசவித்து, அவற்றை கொன்று, உடல்களை அலமாரி மற்றும் கூரைக்கூடில் மறைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வீட்டு உரிமையாளர் வீட்டை சுத்தம் செய்ய வந்தபோது, ஒரு குழந்தையின் உடல் துணிகள் மற்றும் பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்டு அலமாரியில் கிடந்ததைக் கண்டு, போலீஸுக்கு தகவல் கொடுத்தார். போலீஸ் தேடுதலில் மேலும் மூன்று உடல்கள் கூரைக்கூடில் டோட் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பாத்திரங்களில் மறைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
இந்த மனித இனம் தாங்க முடியாத கொடூரச் செயல், அவரின் இரு உயிருள்ள குழந்தைகளின் (6 மற்றும் 8 வயது) எதிர்காலத்தைப் பற்றியும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
போலீஸ் விசாரணையில் ஜெசிகா, அனைத்து பிரசவங்களும் குளியலறையில் நடந்ததாக ஒப்புக்கொண்டார். முதல் குழந்தை பிரசவத்தின்போது ஒரு மென்மையான சத்தம் கேட்டதும் அவர் மயங்கி விழுந்ததாகவும், மயக்கத்தில் இருந்து விழித்தபோது குழந்தை அடியில் அழுத்தி மூச்சுத்திணறி இறந்திருந்ததாகவும் கூறினார்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது குழந்தைகள் இறந்து பிறந்தவை என்றும், எந்த சத்தமும் இல்லை என்றும் தெரிவித்தார். ஆனால் நான்காவது குழந்தை உயிருடன் பிறந்ததும், அதை தண்ணியில் அழுத்தி கொன்றதாகவும், அதன் உடலை துணியில் சுற்றி மறைத்ததாகவும் சொன்னார்.
அவர் பிரசவங்களை அறிவிக்காததற்கு காரணமாக, ஒரு சமயம் போதைக்கு எதிரான மருந்தை சட்டவிரோதமாக உட்கொண்டதால் தண்டனைக்கு பயந்ததாகக் கூறினார். இப்போது குற்றவாளியாகக் கைது செய்யப்பட்ட அவர், கொலை, உடல் மறைப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் நிற்கிறார்.
