தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியரும், அதைப் பற்றி தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
பட்டுக்கோட்டை அருகே எட்டுபுலிகாடு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம், அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் பாஸ்கர் (53) என்ற ஆசிரியர் சனிக்கிழமை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
வீட்டுக்கு சென்ற மாணவி, நடந்ததை தாயிடம் தெரிவித்ததும், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, பள்ளி முன்பு மாணவியின் பெற்றோர்கள், பிற மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரை, பெற்றோர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு கட்டத்தில் பதட்ட நிலை நிலவியது.
போலீசார் பின்னர் ஆசிரியர் பாஸ்கரை அழைத்து விசாரணை நடத்தியதில், மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாஸ்கர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
மேலும் விசாரணையில், சம்பவம் தலைமை ஆசிரியை விஜயாவுக்கு தெரிந்திருந்தும் அவர் அதைக் குறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்காமல் மறைத்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமை ஆசிரியை விஜயாவையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் பட்டுக்கோட்டை காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
