பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் டிஜிபி முகமது முஸ்தபா மற்றும் அவரது மனைவி, முன்னாள் அமைச்சர் ரஜியா சுல்தானாவின் மகன் அகில் அக்தர் மரணத்தை சுற்றி பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. 33 வயதான அகில் கடந்த வியாழக்கிழமை இரவு பஞ்ச்குலாவில் உள்ள தனது வீட்டில் மயக்கமடைந்த நிலையில் கிடந்தார்.

உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்ததாக கூறப்பட்டது. குடும்பத்தினர், “அகில் போதைப்பொருள் அளவுக்கு மீறி எடுத்ததால் உயிரிழந்தார்” என தெரிவித்திருந்தனர். ஆனால், போலீசார் தொடக்க விசாரணையில் “சில மருந்துகள் உட்கொண்டதால் உடல் நலம் பாதித்து மரணம் ஏற்பட்டிருக்கலாம்” என கூறினர்.

இந்நிலையில், அகில் மரணத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு பதிவு செய்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அகில் தனது தந்தை முகமது முஸ்தபா மற்றும் மனைவிக்கு இடையில் தகாத உறவு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் தாய் ரஜியா சுல்தானா மற்றும் சகோதரி தன்னை கொலை செய்ய சதி செய்ததாகவும் கூறியுள்ளார். “என் தந்தைக்கும், என் மனைவிக்கும் இடையில் உள்ள உறவை நான் கண்டுபிடித்தேன். இதனால் நான் மன ரீதியாக சிதறி இருக்கிறேன். அவர்கள் என்னை பொய் வழக்கில் சிக்க வைக்க முயல்கிறார்கள்” என அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

அகில் மேலும், “என் தாய் மற்றும் சகோதரி தினமும் என்னை மிரட்டுகிறார்கள். நான் எதிர்க்கும் போதெல்லாம் அவர்கள் என்னை பைத்தியம் என்று கூறி தப்பிக்க முயல்கிறார்கள். என் மனைவியை நான் திருமணம் செய்தது அல்ல; அவர் என் தந்தையை திருமணம் செய்த மாதிரி நடந்துகொண்டார்.

நான் சரியான கேள்வி கேட்டால், அவர்கள் கதையை மாற்றுகிறார்கள். நான் உயிருடன் இருக்க முடியாது என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ அவரது நண்பர்களிடம் அனுப்பப்பட்டு தற்போது விசாரணையில் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது.

அதேநேரத்தில், மற்றொரு வீடியோவில் அகில், “என் குடும்பத்தினர் மீது கூறிய குற்றச்சாட்டுகள் என் மனநிலை பிரச்சினையால் ஏற்பட்டவை” என கூறியிருப்பது விசாரணைக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அகிலின் மரணம் இயல்பானதா, அல்லது திட்டமிட்டதா என்பதை உறுதிப்படுத்த போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தற்போது போலீசார், முன்னாள் டிஜிபி முகமது முஸ்தபா, முன்னாள் அமைச்சர் ரஜியா சுல்தானா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். “அகிலின் சமூக ஊடக பதிவுகள், வீடியோக்கள் மற்றும் சில புகைப்படங்கள் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது” என துணை காவல் ஆணையர் சிருஷ்டி குப்தா தெரிவித்துள்ளார்.

மிக உயர்ந்த பதவியில் இருந்த தந்தை மற்றும் தாய் மீது மகனே இவ்வாறு அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு சுமத்தியது பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.