சபரிமலை தங்க திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட உண்ணிகிருஷ்ணன் போட்டி, நீதிமன்ற ஆணையின்படி பத்தனம்திட்டா எஸ்.பி அலுவலகத்துக்கு போலீசாரால் அழைத்து வரப்பட்டார். அங்கு மதிய உணவுக்கு “தயிர் வேண்டும்” என போட்டி கேட்டதால், போலீசார் அருகிலிருந்த கடைக்குச் சென்று தயிர் வாங்கினர்.
ஆனால் அதற்குள் யாரோ ஒருவரால் போட்டிக்கு தயிர் வழங்கப்பட்டிருந்ததால், போலீசார் வாங்கிய தயிரை மீண்டும் கடைக்குத் திருப்பி அளித்தனர். அப்போது தான் கடை உரிமையாளருக்கு போலீஸ் வாங்கிய தயிர் யாருக்காக என்பதும் தெரிந்தது.
“அய்யனின் தங்கத்தை திருடியவனுக்கு இனிமேல் தயிர் கிடையாது! இன்று வாங்கியது சரி, இனிமேல் எதுவும் கிடையாது,” என கடை உரிமையாளர் கூறியதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளது. மேலும், அவர் தயிரின் பணத்தையும் போலீசாரிடமிருந்து வாங்க மறுத்துவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சபரிமலையின் 2 கிலோ தங்கம் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட உண்ணிகிருஷ்ணன் போட்டி, தற்போது 13 நாட்கள் சிறப்பு விசாரணை குழுவின் காவலில் உள்ளார். திருவனந்தபுரம் குற்றப்பிரிவு அலுவலகத்தில் நீண்ட நேர விசாரணைக்குப் பிறகே அவரது கைது பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் போட்டி முதல் கைதாகியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
