1976-ஆம் ஆண்டு புனே நகரில் கட்டப்பட்ட ஜே.எம். ரோடு, இன்று 50 ஆண்டுகளைக் கடந்தும் புதியதுபோலவே இருக்கிறது. ஒரு சிறு சேதம் கூட இல்லாமல் திகழும் இந்தச் சாலை, புனேயின் சிறந்த சாலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 1972-ஆம் ஆண்டு பெய்த கனமழையால் பூனையின் பல சாலைகள் பெரிதும் சேதமடைந்தன. அப்போது தரம் குறைந்த பொருட்களால் சாலைகள் கட்டப்பட்டதே இதற்குக் காரணம் என்பது தெரியவந்தது. அதனால், உயர்தரமாக சாலை கட்டத் தயாரானவருக்கு டெண்டர் கொடுக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அந்த நேரத்தில் புனே கார்ப்பரேஷனில் அதிகாரியாக இருந்த ஸ்ரீகாந்த் சீருலா, பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு ரிகண்டோ என்ற நிறுவனத்தைத் கண்டுபிடித்தார். இந்த நிறுவனத்துக்கு ஜே.எம். ரோடு கட்டும் ஒப்பந்தத்தை ஸ்ரீகாந்த்தே வழங்கினார். ரிகண்டோ நிறுவனம், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சாலையைச் சரியாக அமைத்தது. எதிர்காலத்தில் பைப் போட வேண்டுமெனில் சாலையைத் தோண்ட வேண்டியதில்லை என, பைப்புகளை முன்கூட்டியே வைத்து கட்டினர். மழைநீர் உடனடியாக வடியும் வகையில் சாய்வுகளும் அமைத்தனர். சாலை கட்டி முடித்ததோடு நில்லாமல், 10 ஆண்டு உத்தரவாதமும் கொடுத்தனர் – ஏதேனும் பழுது ஏற்பட்டால் இலவசமாக சரிசெய்வோம் என உறுதியளித்தனர்.

ஆனால் 50 ஆண்டுகளாகியும் சாலையில் எந்தப் பாதிப்பும் இல்லை. அதிசயமாக, ரிகண்டோ நிறுவனத்துக்கு அதன் பிறகு எந்த ஒப்பந்தமும் கொடுக்கப்படவில்லை என்கிறார்கள். இந்தச் சாலையின் கதை இடம்பெற்ற வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது தரமான கட்டுமானத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.