கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெற்ற தசரா விழா சோகத்திலும் கொடூரத்திலும் முடிந்தது. கலபுரகி மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி, தனது பெற்றோருடன் பலூன் விற்பனை செய்ய மைசூரு வந்திருந்தார். கடந்த 8-ந்தேதி சாமுண்டிமலை தெப்ப உற்சவத்தை ஒட்டி, சிறுமி மற்றும் பெற்றோர் உள்ளிட்ட பல வியாபாரிகள், தசரா கண்காட்சி மைதானத்தில் படுக்கை போட்டு தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது சிறுமியை கார்த்திக் (31) என்பவர் கடத்திச் சென்று அருகிலுள்ள புதரில் வைத்து, ஆடைகள் கிழித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்தச் செயலை அடுத்து, சிறுமியை 19 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொன்றுவிட்டு கார்த்திக் தப்பி ஓடியுள்ளார். நஜர்பாத் போலீசார் வழக்குப்பதிந்து தேடுதல் வேட்டையில் இறங்கியபோது, சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகாலில் பதுங்கியிருந்த கார்த்திக் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யும் போது போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதால், அவரது காலில் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்தனர். தற்போது மைசூரு கே.ஆர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கார்த்திக் குறித்து, மருத்துவ பரிசோதனையில் குற்றச்செயல் செய்தபோது இவர் குடிபோதையில் இருந்தது உறுதியானது. மறுபுறம் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையிலும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதுடன், இடுப்புப் பகுதியில் மட்டும் 19 கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக கொடூர தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தச் சம்பவம் மைசூரு மாநகரை மட்டுமல்ல, கர்நாடக மாநிலத்தையே உலுக்கியுள்ளது. சிறுமியின் கொடூர உயிரிழப்பு மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், குற்றவாளி கார்த்திக் குணமடைந்ததும் காவலில் எடுத்து, மேலதிக விசாரணை நடத்துவதாகவும், கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.