உத்தரபிரதேச மாநிலத்தின் பதேபூர் மாவட்டத்தில் மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் பயங்கர முடிவை எட்டியது. முகேஷ் நிஷாத் (32) என்பவர், டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர். அவருக்கு குடியா தேவி (26) என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். சில வாரங்களாக குடியா தேவிக்கு பக்கத்து வீட்டுக்காரருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக கணவனுக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில், கடந்த வாரம் விடுமுறைக்காக வீடு திரும்பிய முகேஷ், மனைவியை எதிர்கொண்டு அந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதையடுத்து இருவருக்கிடையில் கடுமையான வாக்குவாதம் உருவாகியது. கோபத்தில் மூழ்கிய முகேஷ், தனது அருகில் இருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்துத் தன்னுடைய மனைவியை சரமாரியாக சுட்டார். சம்பவ இடத்திலேயே குடியா தேவி உயிரிழந்தார்.

இந்தக் கொடூர சம்பவத்துக்குப் பிறகு மன அழுத்தத்துக்கு ஆளான முகேஷ், அதே துப்பாக்கியை பயன்படுத்தி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திடுக்கிடும் சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.