செங்குன்றம் அருகே உள்ள நல்லூர் ஊராட்சியின் காட்டு நாயக்கன் நகரைச் சேர்ந்த மணிமாறன் (26) பழைய பேப்பர் மற்றும் குப்பைகள் சேகரித்து இரும்புக் கடைகளில் விற்று வாழ்க்கை நடத்தி வந்தவர். நேற்று மாலை, அப்பகுதியில் உள்ள தனியார் பிளாஸ்டிக் சேர்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்குள் மணிமாறன் திருடுவதற்காக நுழைந்ததாக கூறப்படுகிறது.

இதை கவனித்த அந்நிறுவன ஊழியர்கள், அவரை மடக்கிப் பிடித்து கம்பத்துடன் கட்டிவைத்து, இரும்புக் கம்பிகள் மற்றும் ராடுகளால் அடித்துத் தாக்கினர். இந்த தாக்குதலின் போது மணிமாறனின் தலையை மொட்டை அடித்து கொடூரமாக சித்ரவதை செய்தனர். இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர், இந்த சம்பவம் வெளியிடாமல் இருக்க, அவரது உடலை தொழிற்சாலை ஊழியர்கள் அருகிலுள்ள கால்வாயில் தூக்கிச் சென்று வீசினர். இது தொடர்பான தகவல் அவரின் உறவினர்களுக்கு இன்று காலை கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, மணிமாறனின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள், தனியார் தொழிற்சாலையை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த செங்குன்றம் உதவி கமிஷனர் ராஜா ராபர்ட், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கால்வாயில் வீசப்பட்ட மணிமாறனின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

இவரது படுகொலை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதும், இது குறித்து காவல்துறையினருக்கு தெளிவான தகவல்கள் கிடைத்தன. தற்போது இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் 4 ஊழியர்கள் மீது செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்றும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மணிமாறனின் மீது ஏற்கனவே எந்தவித குற்ற வழக்குகளும் இல்லை எனவும் போலீசார் உறுதி செய்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் செங்குன்றம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாலிபரை கட்டி வைத்து அடித்து கொலை செய்தது என்பது மனிதத்தன்மையை முற்றிலும் கேள்விக்குள்ளாக்கும் செயல் எனக் குறிப்பிடப்படுகிறது. பொதுமக்கள், இதுபோன்ற கொடூர செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.