நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் சமீபத்தில் கேரள மாநிலம் மூணாறு பகுதிக்கு கல்வி பயணமாகச் சென்றிருந்தனர். அப்போது, உடன் சென்ற பேராசிரியர் ஒருவர், ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்த தகவல் அறிந்த மாணவியின் நண்பர்கள் ஆத்திரமடைந்து, சம்பந்தப்பட்ட பேராசிரியரை தாக்கியதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் புகார் அளித்தது. புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி, கல்லூரி மாணவர்கள் நால்வரை கைது செய்தனர்.

இந்நிலையில், கல்லூரி வளாகத்தில் பேராசிரியர்கள் தங்கும் அறைக்குள் புகுந்து, அந்த பேராசிரியரை மாணவர்கள் தாக்கிய காட்சி கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், சில மாணவர்கள் நாற்காலிகள் மற்றும் பைகளை  தூக்கி எறிவதும், பேராசிரியரை கைகளால் தாக்குவதும்,  கோங்கள் எழுப்புவதும் போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.

சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலியல் புகாருக்கு உள்ளான பேராசிரியரை இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.