விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா சித்தேரிப்பட்டையைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 30) என்பவர், கடந்த மே 12ஆம் தேதி தனது பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி, இது குறித்து வெளியில் யாரிடமாவது கூறினால் கொன்று விடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

புகாரின்பேரில் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் விசாரணை நடத்தி, அவரை POCSO சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

விசாரணையில், விஜயகுமார் இதற்கு முந்தைய காலங்களிலும் இத்தகைய தவறான செயல்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்ததை தொடர்ந்து, அவர் மீண்டும் இவ்வகைச் செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் பரிந்துரையின் அடிப்படையில், விஜயகுமாரை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவின் பேரில், திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் நேற்று விஜயகுமாரை அதிகாரப்பூர்வமாக தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், தற்போது கடலூர் மத்திய சிறையில் உள்ள விஜயகுமாருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது. இந்த சம்பவம், குழந்தைகள் மீதான குற்றச்செயல்களை தடுக்க காவல்துறையின் கையெழுத்தாக பரிசீலிக்கப்படுகிறது.