அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்த துயரமான நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய கட்சி தொண்டர்களை வைத்தே தவெக கொடியை தூக்கிப் பிடிக்க வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதிலிருந்தே தெரிகிறது விஜயின் தலைமையை ஏற்று கூட்டணிக்கு செல்ல அவர் தயாராகிவிட்டார் என்று. அந்த அளவிற்கு அதிமுக பலவீனம் ஆகிவிட்டது. விஜய் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் எடப்பாடி பழனிசாமி பாஜகவை கழட்டிவிட தயங்க மாட்டார்.
ஆனால் விஜய் கூட்டணிக்கு வருவாரா என்பது தெரியாது. விஜய் அதிமுக கூட்டணிக்கு வரவேண்டும் என்பதற்காகத்தான் தன் கட்சி தொண்டர்களை வைத்தே தவெக கொடியை எடப்பாடி பழனிசாமி தூக்கி பிடிக்கிறார். தமிழ்நாடு காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும் என்பதால் தான் சிபிஐ விசாரணை வேண்டாம் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. எந்த அரசாக இருந்தாலும் இதைத்தான் செய்யும் என்றார். மேலும் கரூர் சம்பவத்தில் டிடிவி தினகரன் ஆளும் கட்சிக்கு ஆதரவாக பேசி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
