இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பெண் முழுக்க முழுக்க தங்கத்தால் ஆன ஒரு அழகிய உடையை அணிந்து நடப்பதைக் காணலாம். இந்த உடை மிகவும் பளபளப்பாகவும், அற்புதமான கைவேலைப்பாடுகளுடனும் இருப்பதால், பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்தப் பெண்ணின் நம்பிக்கையும், அழகான நடையும் இந்த உடையின் அழகை மேலும் உயர்த்துகிறது. ஆனால், இந்த உடையின் விலையைக் கேள்விப்பட்டால் எவரும் அதிர்ச்சியடைவர். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இதை “படத்தில் வருவது போலவும்”, “ராஜ வம்சத்து உடை போலவும்” இருப்பதாகக் கூறி, வியந்து பேசி வருகின்றனர்.
இந்த வீடியோவை கின்னஸ் உலக சாதனைகள் (Guinness World Records) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, இந்த உடையை “உலகின் மிக மதிப்புமிக்க தங்க உடை” என்று அறிவித்துள்ளது. இதன் விலை 1,088,000 டாலர்கள், அதாவது 9.66 கோடி ரூபாய்க்கு மேல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உடையை ‘அல் ரோமைஜான் கோல்ட் அண்ட் ஜூவல்லரி’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. 7 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்ட இந்த வீடியோவை 15,000-க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். மேலும் பயனர்கள் “நகைகளைப் புரிந்து கொள்ளலாம், ஆனால் தங்க உடை? இது அதிகம்!” என்றும், “இதை வைத்திருக்க லாக்கரே தேவை!” என்றும், “இவ்வளவு விலையுயர்ந்த உடையை அணிந்து எப்படி சாதாரணமாக நடக்க முடியும்?” என்றும் நகைச்சுவையாக கமெண்ட் செய்துள்ளனர்.
