சமூக வலைத்தளங்களில் காடுகளில் வாழும் விலங்குகளின் வேட்டைத் திறன் மற்றும் விசித்திரமான நடவடிக்கைகள் குறித்த வீடியோக்கள் எப்போதுமே நெட்டிசன்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறுவது வழக்கம். அந்த வகையில், தற்போது ‘எக்ஸ்’ (X) இணையதள பக்கத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ, புலியின் அசாத்திய வலிமை, வேகத் திறன் மற்றும் அதன் தந்திரமான வேட்டை உத்தியை விவரிப்பதாக அமைந்து பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வீடியோவில், நதிக்கரையில் ஆற்று நீரின் அருகே ஒரு புலி மிகவும் அமைதியாகத் தனது இரைக்காகக் காத்திருக்கிறது. அப்போது அங்கிருந்த ஒரு சிறிய மான் குட்டியைக் கண்டதும், புலி துளிக்கூடத் தாமதிக்காமல் மின்னல் வேகத்தில் பாய்ந்து அதன் கழுத்தைப் பிடித்துத் தாக்குகிறது.

அந்தச் சிறிய மான் குட்டிக்குத் தனக்கு என்ன நேர்கிறது என்பதை உணர்வதற்குள், அதன் கழுத்து புலியின் பலத்த தாடைகளுக்குள் சிக்கிக் கொள்கிறது. தண்ணீரில் இருந்து தப்பித்து ஓட மான் குட்டி எவ்வளவோ முயன்றும், புலி தண்ணீரைச் சிதறடித்தபடி அதன் மீது பாய்ந்து சில நொடிகளிலேயே வேட்டையை வெற்றிகரமாக முடித்து விடுகிறது.

இந்த வீடியோ ‘@paragenetics’ என்ற எக்ஸ் கணக்கில் பகிரப்பட்டு, தற்போது பல்லாயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. புலி என்பது சாதாரண வேட்டையாடி அல்ல, அது சரியான தருணத்திற்காகக் காத்திருந்து குறுகிய தூரத்தை அதிவேகமாகப் பாய்ந்து கடக்கும் ஒரு ‘மாஸ்டர் பிளானர்’ என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவிற்கு இணையவாசிகள் பலரும், “இது காட்டின் கொடூரமான உண்மை” என்றும், “இது கொடூரம் அல்ல, இயற்கையின் சமநிலை” என்றும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.