2024 டிசம்பர் 25-ம் தேதி, பாகுவிலிருந்து குரோஸ்னிக்குச் சென்ற அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கஜகஸ்தானின் அக்தா நகருக்கு அருகில் விபத்துக்குள்ளானது. ரஷியாவின் தாக்குதலில் விமானம் சேதமடைந்ததையடுத்து அவசர தரையிறக்கம் செய்யும் முயற்சியில் விழுந்து, விமானிகள் உட்பட 38 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அஜர்பைஜானில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
விபத்து தொடங்கிய நாள் முதலே, அஜர்பைஜான் அதிகாரிகள், ரஷியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் விமானத்தைக் குறிவைத்து தாக்கியதாக புகார் தெரிவித்திருந்தனர். விமானம் பயணிகள் விமானம் என்பதை உணராமல், அதனை சந்தேகத்திற்குரியதாக கருதி தாக்கியதாக கூறப்பட்டது.
இதை தொடர்ந்து, அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ், இந்த தாக்குதலை சர்வதேச குற்றமாகக் குறிப்பிடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கடுமையாக எச்சரித்திருந்தார். தஜிகிஸ்தானில் நடைபெற்ற முன்னாள் சோவியத் நாடுகளின் மாநாட்டில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அஜர்பைஜான் அதிபர் அலியேவ் நேருக்கு நேர் சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பில், ரஷியாவின் விமானத் தற்காப்பு அமைப்புகள் தவறுதலாக அந்த விமானத்தை இலக்காக எடுத்தது உறுதி செய்யப்பட்டதாக புதின் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். அதேசமயம், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஜூலை மாதமே அஜர்பைஜான் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரத் தயாராகி வருவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது புதின் நேரடியாகத் தவறை ஒப்புக்கொண்டுள்ளது, சர்வதேச ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ரஷியாவின் தவறால் ஏற்பட்ட பயணிகள் விமான விபத்து என்ற வகையில் இது, உலக நாடுகளில் வன்மையான விமர்சனங்களை உருவாக்கி வருகிறது.
