ஜம்மு-காஷ்மீரிலிருந்து உத்தரபிரதேசத்தின் கான்பூருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணித்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஓடும் ரெயிலில் பிரசவ வலி ஏற்பட்டு, பெண் குழந்தை பிறந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு டவி பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண், தனது கணவருடன் கான்பூருக்கு பயணம் செய்து கொண்டிருந்தார். ரெயில் அரியானாவின் அம்பாலா அருகே சென்றபோது, அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக ரெயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அம்பாலா காண்ட் ரெயில் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டது.

ரெயிலில் இருந்து கர்ப்பிணியை உடனடியாக இறக்கி, நிலையத்தில் உள்ள மருத்துவ அறையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பிரசவத்தை மேற்கொண்டனர். இதில் அழகிய பெண் குழந்தை பிறந்தது.

பின்னர், தாயும் குழந்தையும் மேல் சிகிச்சைக்காக அம்பாலாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். தற்போது தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நெகிழ்ச்சியான சம்பவம், ரெயில்வே ஊழியர்கள் மற்றும் மருத்துவக் குழுவின் உடனடி நடவடிக்கையால் வெற்றிகரமாக முடிந்துள்ளது.