பெங்களூருவில் கணவன் மனைவியை 45 முறை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தைச் சேர்ந்த ரமேஷ், துபாயில் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர். இவரது மனைவி மஞ்சு, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர்.

2022-ல் திருமணமான இவர்களுக்கு குழந்தை இல்லை. திருமணத்திற்குப் பின் ரமேஷ் துபாய் சென்ற நிலையில், மஞ்சு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார்.

உல்லால் மெயின் ரோட்டில் வாடகை வீட்டில் வசித்து வந்த மஞ்சுவைப் பார்க்க, சமீபத்தில் ரமேஷ் விடுமுறையில் பெங்களூரு வந்திருந்தார்.

சம்பவத்தன்று, அவர்களது வீட்டுக் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்ததால், அயலவர்கள் சந்தேகமடைந்து மஞ்சுவின் தந்தைக்குத் தகவல் கொடுத்தனர்.

உதிரி சாவி மூலம் வீட்டைத் திறந்து பார்த்தபோது, மஞ்சு ரத்த வெள்ளத்தில் கத்தியால் குத்தப்பட்டு பிணமாகக் கிடந்தார். அருகில், மின் விசிறியில் ரமேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

பிரேதப் பரிசோதனையில், மஞ்சுவை ரமேஷ் 45 முறை கத்தியால் குத்தி கொலை செய்தது உறுதியானது. குடும்பப் பிரச்சினையால் ஏற்பட்ட தகராறு இந்த கொடூரத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பெங்களூரு காவல்துறை, இருவரின் உறவினர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.