ராஜஸ்தானின் சீகர் மாவட்டத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியின் போது, காளை மாடு ஒன்று போலரோ காரில் மோதியது. இதனால் காரின் முன்புறம் சற்று சேதமடைந்தது. இதனால் கோபமடைந்த காரின் உரிமையாளர்கள், மாட்டை துரத்தி காரால் மோதி தூக்கி எறிந்தனர். பின்னர், மாட்டின் கழுத்தில் காரின் சக்கரங்களால் பலமுறை உருட்டி, அதை கொன்றுவிட்டனர். இதை அருகில் இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்தனர். மாட்டை கொன்ற பிறகு காரில் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதும், மக்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தினர். நெச்ச்வா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனிடையே ராஜஸ்தான் மாநில வளர்ச்சிக் கழகத் தலைவர் ஹனுமான் பெனிவால், பாஜக அரசை விமர்சித்து, “மாடுகளுக்காக வாக்குகள் கேட்கும் பாஜக ஆட்சியில் இப்படி கொடூரம் நடக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார். காவல்துறை, காரை பறிமுதல் செய்து, ஒரு குற்றவாளியை கைது செய்துள்ளது. மற்றவர்களைப் பிடிக்க டீம் அமைத்து, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்துள்ளது.