மும்பையை அடுத்த திவா ரெயில் நிலையத்தில் நேற்று காலை 10 மணியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடைபெற்றது. பிளாட்பாரம் நம்பர் 1-ல் நின்ற ஏ.சி. மின்சார ரெயிலின் மேற்கூரையில் ஆசாமி ஒருவர் அமர்ந்தபடியே பயணம் செய்ததாக கூறப்படுகிறது. ரெயில் நிலையத்தை அடைந்ததும், அவர் கீழே இறங்க முயன்ற நிலையில், தவறி விழுந்து உயர் மின்அழுத்த கம்பியில் தொடுவதைத் தொடர்ந்து, அவர் மீது மின்சார தாக்கம் ஏற்பட்டது.

அந்த வேளையில் அவரது உடலில் தீப்பற்றியதோடு, ஆடை முழுவதும் எரிந்துவிட்டதாக தெரிகிறது. இதில் அவர் மிகவும் கொடூரமான தீக்காயங்களுக்கு ஆளானார். இதனை கண்ட பயணிகள் பரபரப்புடன் அலறி சத்தம் போட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ரெயில்வே போலீசார், உடல் முழுவதும் கருகி பரிதவித்து கொண்டிருந்த அவரை மேலே இருந்து மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கல்வா சிவாஜி மருத்துவமனைக்கு அனுப்பினர். தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சையில் உள்ளதாக மருத்துவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் காரணமாக அந்த ஏ.சி. மின்சார ரெயில் சுமார் 38 நிமிடங்கள் தாமதமாக காலை 10.38 மணியளவில் திவா நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமல் இருக்க, பொதுமக்கள் ரெயில் பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.