உலகளவில் தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) எனப்படும் தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிகமாகி வருகிறது. இந்தியாவிலும் இதன் பயன்பாடு வேகமாக பரவி வருகிறது.
பொதுமக்கள் கூட ஸ்மார்ட்போன்கள் வழியாக ஏஐயைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதால், அது நாளுக்கு நாள் மக்கள் வாழ்க்கையில் ஆழமாக நுழைந்து வருகிறது. ஏஐ மூலம் பல நன்மைகள் கிடைத்தாலும், அதே அளவுக்கு தீமைகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வேலைவாய்ப்பில் ஏற்படும் சவால்கள் குறித்து கவலைகள் எழுந்துள்ளன.
பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சமீபத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதற்கு செயற்கை நுண்ணறிவு காரணமில்லை என்று நிறுவனங்கள் விளக்கம் அளித்தாலும், நிபுணர்கள் கருத்துப்படி மறைமுகமாக ஏஐ தொழில்நுட்பமே பணிநீக்கத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது.
இயந்திரங்கள் மனிதர்களின் பங்களிப்பை குறைக்கும் சூழல் உருவாகி வருவதால், வேலைவாய்ப்பு இழப்பு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) நடத்திய ஆய்வில், செயற்கை நுண்ணறிவின் தாக்கம் காரணமாக உலகளவில் பணிபுரியும் ஆண்களில் 21% பேரின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படலாம் எனவும், பெண்களில் 28% பேருக்கு வேலை இழப்பு ஏற்படக்கூடும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
இது பெண்களின் பொருளாதார சுயநிறைவு மட்டுமின்றி, சமூகத்தில் அவர்களின் பங்கு குறையக்கூடும் என்ற எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மனித வள பாதுகாப்பு ஆகிய இரண்டுக்கும் சமநிலை தேவைப்படுவதாக நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
