கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த தர்ஷினி (18), கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தவர். அதேசமயம், விருத்தாசலம் பஸ் நிலையம் அருகிலுள்ள ஒரு செல்போன் கடையில் பகுதி நேர வேலை செய்துவந்தார். அவரும், அருகிலுள்ள வாலிபர் ஒருவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது. நேற்று காலை கடையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அந்த வாலிபருடன் வீடியோ காலில் பேசும் போதே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
தகராறு காரணமாக மனமுடைந்த தர்ஷினி, கடையின் பின்புற அறைக்கு சென்று, அங்கு தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையெல்லாம் வீடியோ காலில் பார்த்த அந்த வாலிபர், உடனடியாக கடையில் இருந்த ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார். அந்த நேரத்தில் ஓடி வந்தவர்கள் தர்ஷினியை தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டும், அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்நிலையில், தர்ஷினி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
