கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஒரு இளம்பெண் தனது தாயுடன் வசித்து வருகிறார். அந்த இளம்பெண் வாய்ப் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக உள்ளார். அவரது தாய் கூலி வேலை செய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் இளம்பெண்ணின் தாய் வேலைக்குச் சென்றதால், வீட்டில் இளம்பெண் மட்டும் தனியாக இருந்தார். அந்தச் சமயத்தில், அதே பகுதியைச் சேர்ந்த 36 வயது அபு பாஷா என்பவர், அந்த இளம்பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். பின்னர், இளம்பெண்ணை வலுக்கட்டாயப்படுத்தி அபு பாஷா பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
ஆனால், இளம்பெண் மறுப்பு தெரிவித்ததால், அவரது ஆடைகளை கிழித்து எறிந்து தாக்கியதுடன், வாயில் துணியைத் திணித்து பலாத்காரம் செய்ய முயன்றார். இதற்கிடையே, கூலி வேலைக்குச் சென்றிருந்த இளம்பெண்ணின் தாய் வீட்டுக்கு வந்தார். இதனால் பயந்து போன அபு பாஷா, பலாத்கார முயற்சியை கைவிட்டு வெளியே அவசர அவசரமாக ஓடி வந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த இளம்பெண்ணின் தாய், அபு பாஷாவைப் பிடிக்க முயன்றார். ஆனால், அவரைத் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர், சம்பவம் பற்றி பெண்ணின் தாய் ஹல்லிகேடா போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில், போலீசார் அபு பாஷா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்த அபு பாஷாவை கைது செய்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
