மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, எத்தனால் கலந்த பெட்ரோல் (E20) திட்டத்தில் தனது குடும்ப நலன் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து பதிலடி கொடுத்துள்ளார். நாக்பூரில் நடைபெற்ற வேளாண் நல சங்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், “எனது மூளை மாதம் ரூ.200 கோடி சம்பாதிக்கும் மதிப்புடையது. எவ்வாறு சட்டப்படி சம்பாதிக்க வேண்டும் என எனக்கு நன்றாகத் தெரியும். எனக்கு எந்த விதமான பண பிரச்சனையும் இல்லை. எத்தனால் கலப்பு திட்டம் எனது சொந்த நலனுக்காக அல்ல,” என்றார்.
ஏப்ரல் 2023ல், நாடு முழுவதும் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் (E20) அறிமுகப்படுத்தப்பட்டது. கார்பன் உமிழ்வைக் குறைத்து, கச்சா எண்ணெய் இறக்குமதியை தடுக்கும் நோக்குடன் மத்திய அரசு இந்த திட்டத்தை தொடங்கியது. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் மற்றும் நிபுணர்கள் சார்பில், “எத்தனால் கலப்பால் வாகன மைலேஜ் குறைகிறது” என்ற விமர்சனங்கள் எழுந்தன. மேலும், நிதின் கட்கரியின் இரு மகன்களும் முன்னணி எத்தனால் உற்பத்தி நிறுவனங்களை நடத்துகிறார்கள் என்பதையும், அதனால் தனிப்பட்ட லாபம் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியானது.
இந்த நிலையில், நிதின் கட்கரி கூறியதாவது: எனது மகன்கள் சட்டப்படி தொழில் செய்கின்றனர். அவர்கள் எந்த விதமான மோசடிகளிலும் ஈடுபடவில்லை. நான் அவர்களுக்கு ஆலோசனைகள் மட்டும் தருகிறேன். சமீபத்தில் என் மகன், ஈரானில் இருந்து 800 கண்டெய்னர் ஆப்பிள்களை இறக்குமதி செய்தார். அதே நேரத்தில், இந்தியாவிலிருந்து 1000 கண்டெய்னர் வாழைப்பழங்களை ஈரானுக்கு ஏற்றுமதி செய்தார். நாக்பூரில் உள்ளூர் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில், நான் சில தொழில்முனைவு முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன். எனக்கும் சொந்தமாக சர்க்கரை ஆலை மற்றும் மின் உற்பத்தி மையம் உள்ளது. எனது பரிந்துரைகள் லாப நோக்கில் அல்ல; தேசிய வளர்ச்சி நோக்கில் தான்,” என அவர் தெரிவித்தார்.
