லண்டனில் குடியேற்ற எதிர்ப்பு மற்றும் இஸ்லாம் எதிர்ப்பு ஆர்வலர் டாமி ராபின்சன் ஏற்பாடு செய்த ‘யுனைட் தி கிங்டம்’ பேரணியில், இங்கிலாந்து கொடியை உடுத்திய ஒரு போராட்டக்காரர் இந்திய உணவகத்தில் வெங்காய பஜ்ஜி வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

செப்டம்பர் 13, சனிக்கிழமை நடந்த இந்த பேரணியில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அமெரிக்க வலதுசாரி ஆர்வலர் சார்லி கிர்க்கின் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து இந்த பேரணி நடைபெற்றது. பிரிட்டனின் யூனியன் கொடி, இங்கிலாந்தின் செந்நிற-வெண்ணிற புனித ஜார்ஜ் சிலுவை கொடி ஆகியவற்றுடன், சிலர் இஸ்ரேல் கொடிகளையும், MAGA தொப்பிகளையும் அணிந்திருந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது.

சவுத்பேங்க் சென்டரில் உள்ள இந்திய உணவு விற்பனை கடையில், குடியேற்ற எதிர்ப்பு பேரணியில் பங்கேற்ற ஒருவர் வெங்காய பஜ்ஜி வாங்குவது வீடியோவாக பதிவாகி, எக்ஸ் தளத்தில் 80 லட்சத்திற்கும் மேல் பார்வைகளைப் பெற்று, ரெட்டிட், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் பரவியுள்ளது.

“நாட்டை மீட்போம்” என்று கோஷமிட்டவர்கள், அதே நேரத்தில் இந்திய உணவை ருசிப்பது முரண்பாடாக உள்ளதாக சமூக வலைதள பயனர்கள் கிண்டல் செய்கின்றனர். “பட்டர் சிக்கன், மாம்பழ லஸ்ஸி, தந்தூரி சிக்கனை தடை செய்ய வேண்டும்,” என ஒருவர் கேலி செய்ய, “குடியேற்றத்தை எதிர்க்கும் இவர்கள், அவர்கள் எதிர்க்கும் கலாசாரத்தின் உணவால் ஈர்க்கப்படுகிறார்கள்,” என மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ, குடியேற்ற எதிர்ப்பு பேரணியின் முரண்பாட்டை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது.