“இரவில் வீட்டை விட்டு வெளியே செல்வது பாதுகாப்பானதல்ல, குறிப்பாக பெண்களுக்கு தனியாக நடப்பது ஆபத்தானது” என சொல்லப்படும் சூழலில், துபாயில் நள்ளிரவில் முழுமையான நிம்மதியுடன் சாலையில் நடக்கும் ஒரு இந்தியப் பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை இந்திய ஒப்பனை கலைஞர் த்ரிஷா ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அவர் அதிகாலை 2:37 மணிக்கு சாலையில் தனியாக நடந்து செல்கிறார். வீடியோவில், “நண்பர்களே, இப்போது அதிகாலை 2:37 மணி. நான் சாலையில் தனியாக நடக்கிறேன். இது உலகம் முழுவதிலும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே சாத்தியம் – அது துபாய்! ஹபீபி, துபாய்க்கு வாருங்கள். பெண்கள் இங்கே மிகவும் பாதுகாப்பாக உள்ளனர்!” என அவர் கூறுகிறார்.
View this post on Instagram
வீடியோவுடன் பகிரப்பட்ட பதிவில் த்ரிஷா மேலும் கூறியதாவது, “இந்தியாவில் ஒரு பெண்ணாக வளர்ந்ததால், இரவில் வெளியே செல்ல வேண்டுமானால் எப்போதும் சகோதரர் அல்லது ஆண் நண்பர் துணை தேவைப்பட்டது. ஆனால் துபாயில், இரவு நேரத்திலும், தனியாக சாலையில் நடக்கும்போதும் எனக்கு எந்த பயமும் இல்லை. நான் பாதுகாப்பாகவும், நம்பிக்கையுடனும், சுதந்திரமாகவும் உணர்ந்தேன். பெண்களே, நீங்கள் சுதந்திரமான வாழ்க்கையை அனுபவிக்க விரும்பினால், துபாய் உங்கள் கனவுகளை நிறைவேற்றும் இடம்.”
மேலும் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது வரை 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் மற்றும் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் பெற்றுள்ளதுடன், பலர் த்ரிஷாவின் அனுபவத்தை ஆதரித்து, துபாயின் பெண்கள் பாதுகாப்பை பாராட்டி கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.
