தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகமங்கலத்தில், நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷின் குடும்பத்தினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் மற்றும் மாநில செயலாளர் சண்முகம் ஆகியோர் நேரில் சந்தித்தனர். அவர்களுக்கு ஆறுதல் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிருந்தா காரத், கவின் செல்வகணேஷின் ஆணவப் படுகொலை இந்தியாவிற்கே பெரும் அவமானம் என்று கடுமையாக விமர்சித்தார்.

இந்தச் சம்பவம், இந்தியாவின் உண்மையான சாதி நிலையைப் பிரதிபலிப்பதாகவும், திமுக அரசு கவின் குடும்பத்திற்கு உடனடி உதவிகளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வெறும் இழப்பீடு மட்டும் ஆணவக் கொலைகளுக்கு தீர்வாகாது என்றும், அவர் தெரிவித்தார்.

ஆணவப் படுகொலைகள் வட இந்தியாவில் அதிகளவில் நடப்பதாகவும், அங்கு பாஜக ஆட்சி செய்வதாகவும் பிருந்தா காரத் சுட்டிக்காட்டினார். கடந்த 2014 முதல் 2025 வரை, ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக புதிய சட்டம் இயற்ற வேண்டும் என மத்திய சட்ட ஆணையமும், தேசிய மகளிர் ஆணையமும் பலமுறை பரிந்துரைத்த போதிலும், அதனை மோடி அரசு தொடர்ந்து மறுத்து வருவதாக குற்றம்சாட்டினார்.

எனவே, திமுக அரசு இந்தியாவிற்கு முன்மாதிரியாக, ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக உடனடியாக புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.