உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரில், டிபி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நை பஸ்தி காலனியில், பி.ஏ மாணவி ஒருவரை இளைஞர் ஒருவர் தவறாக நடந்து, அவரது கையை பிடித்து துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி உரத்த குரலில் கூச்சலிட்டதால், அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக கூடி, அந்த இளைஞரை பிடித்தனர். வைரலான வீடியோவில், கோபமடைந்த பொதுமக்கள் அவரை கடுமையாக தாக்குவதும், அவர் தப்பிக்க முயற்சித்தபோதும் தொடர்ந்து அடிப்பதும் தெளிவாகத் தெரிகிறது. இந்த சம்பவம், பொதுமக்களிடையே பெரும் ஆத்திரத்தை தூண்டியது.

பின்னர், குற்றவாளியை பொதுமக்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அந்த வீடியோ எக்ஸ் கணக்கில் பகிரப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. காவல்துறை, அந்த இளைஞரை காவலில் எடுத்து, விசாரணையை தொடங்கியுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.

“பெண்களுக்கு எதிரான இதுபோன்ற செயல்களுக்கு உடனடி தண்டனை தேவை” என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம், பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் விவாதங்களை எழுப்பியுள்ளது.