இங்கிலாந்தில் உள்ள இந்திய உணவகமான சாய் சுர்பி, இரு குடும்பங்கள் 23,500 ரூபாய் மதிப்புள்ள உணவு பில் செலுத்தாமல் தப்பியோடிய சம்பவத்தால் அதிர்ச்சியில் உள்ளது. இந்த சம்பவத்தை உணவக உரிமையாளர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்ததால், இணையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் சிறு வணிகர்களுக்கு பொருளாதார இழப்பை மட்டுமல்லாமல், மன உறுதியையும் பாதிக்கிறது என்று பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். உணவக உரிமையாளர்களான ராமன் கவுர் மற்றும் நரிந்தர் சிங் அத்தவா, ஆகஸ்ட் 30 அன்று நடந்த இந்த நிகழ்வை இன்ஸ்டாகிராமில் விவரித்து, தங்கள் வேதனையை பகிர்ந்து கொண்டனர்.
View this post on Instagram
வீடியோவில், இரு குடும்பங்களைச் சேர்ந்த நான்கு பெரியவர்கள் மற்றும் நான்கு குழந்தைகள் உணவகத்தில் உணவருந்தி, உணவு, சேவை, அலங்காரம் என அனைத்தையும் பாராட்டியதாக உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால், பில் செலுத்தும் நேரத்தில், பெண்களும், குழந்தைகளும் வெளியேற, இரு ஆண்கள் மட்டும் எஞ்சியிருந்தனர்.
அவர்கள் ஐந்து வெவ்வேறு கார்டுகளை முயற்சித்தும், பணம் செலுத்துவதற்கு யாரையோ அழைத்தும் எந்த பலனும் இல்லை. அடையாள அட்டை கேட்டபோது, அவர்களிடம் அதுவும் இல்லை. இறுதியாக, ஒரு பெயரையும் தொலைபேசி எண்ணையும் விட்டுச் சென்று, மறுநாள் பணம் செலுத்துவதாக உறுதியளித்தனர்.
ஆனால், அந்த வாக்குறுதி நிறைவேறவில்லை. “இது போன்ற இழப்பு எங்களைப் போன்ற சிறு வணிகர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு; இந்த 200 பவுண்டுகள் எங்கள் ஊழியர்களின் ஊதியத்திற்கோ, பில்களை செலுத்தவோ, பொருட்கள் வாங்கவோ உதவியிருக்கும்,” என்று உரிமையாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
