சத்தீஷ்கர் மாநிலம் கோர்பா நகரில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரியில், ஹிமான்ஷு காஷ்யப் (24) என்ற மாணவர் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து வந்தார். தேர்வு காலத்தில் கல்லூரி வளாகத்திலேயே உள்ள விடுதியில் தங்கி இருந்த ஹிமான்ஷு, இன்று காலை வகுப்பிற்கு வராததால் நண்பர்கள் சந்தேகமடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து அவருடைய அறைக்கு சென்ற நண்பர்கள், கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கவனித்தனர். பலமுறை அழைத்தும், தட்டியும் திறக்காததை அடுத்து கதவை உடைத்து உள்ளே நுழைந்த போது, ஹிமான்ஷு தூக்குப்போட்டு உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில், ஹிமான்ஷு தற்கொலைக்கு முன்பு எழுதியதாகக் கூறப்படும் ஒரு கடிதம் அவரது அறையில் போலீசாரிடம் சிக்கியது. அதில், “என்னால் இதை செய்ய முடியவில்லை, என்னை மன்னித்து விடுங்கள் அப்பா” என்று உருக்கமாக எழுதி இருந்ததாக தெரிகிறது. இது தேர்வு மன அழுத்தத்தால் நேர்ந்த தற்கொலையா அல்லது வேறு காரணமா என்பதைக் கண்டறிய போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.