பிரதமர் நரேந்திர மோடியையும் அவரது தாயாரையும் அவதூறாக விமர்சித்ததாகக் கூறி, இந்தியா கூட்டணியை கண்டித்து செப்டம்பர் 4ம் தேதி காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பீகார் மாநிலம் முழுவதும் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், ஜெகானாபாத் பகுதியில் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஏற்பட்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவினர் பிரமாண்டமாக பேரணி நடத்திக்கொண்டு சென்றபோது, அந்த வழியாக ஒரு ஆசிரியை பள்ளிக்குச் செல்வதற்காக வந்தார். பள்ளி நேரம் தாமதமாகும் என கூறிய அவர், போராட்டக்காரர்களை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், “முழு அடைப்பு போராட்டம் நடக்கும்போது பள்ளிக்கு செல்ல முடியாது” என பாஜக மகளிர் அணியினர் அவரை தடுத்து நிறுத்தினர். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் உருவானது.

 

இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அங்கிருந்த போலீசார் விரைந்து வந்து, அந்த ஆசிரியை‌யை பாதுகாப்பாக அந்த இடத்திலிருந்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. “போராட்டம் ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் ஆசிரியர் போன்ற நபர்களுக்கு தடை விதிப்பது சரியா?” என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.