தூத்துக்குடி மாவட்டம் பண்டுகரை சாலை அருகே அமைந்துள்ள ஓடையில், அடையாளம் தெரியாத மூதாட்டியின் சடலம் மிதந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்டுகரை சாலை அருகே சாக்கடை நீர் கலந்தபடி பெரும் அளவில் ஓடிக்கொண்டிருந்தது. இது இயற்கை ஓடை அல்லாமல், சாக்கடை கால்வாயாகவே மாறியுள்ளது. இந்நிலையில், இன்று காலை அந்த ஓடையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டியின் சடலம் மிதந்து கொண்டிருந்தது.

இதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மூதாட்டி தவறி சாக்கடை ஓடையில் விழுந்தாரா? அல்லது இது ஒரு கொலை என்று சந்தேகிக்க வேண்டியதா? என்பதைக் கண்டறிய, போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம், பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.