அரியலூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்ற இளைஞர், 2022-ஆம் ஆண்டு IPL சீசன் நடைபெற்ற போது, தனது நண்பர் விக்னேஷுடன் ஊருக்கு வெளியே சென்றுள்ளார். இருவரும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா குறித்து விக்னேஷ் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கடும் கோபமடைந்த தர்மராஜ், தன்னுடன் வைத்திருந்த அரிவாளால் விக்னேஷை பலமுறை வெட்டியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தர்மராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது, “விராட் கோலியை தவறாக பேசியதால்தான் கோபம் வந்து விக்னேஷை தாக்கினேன்” என தர்மராஜ் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த கொலை வழக்கு குறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. வழக்கில் சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, குற்றவாளியான தர்மராஜுக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். கிரிக்கெட் வீரரை பற்றிய கருத்து வித்தியாசம் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு உயிரை பறித்திருப்பது சம்பந்தப்பட்ட எல்லா தரப்பினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
