தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேரனும்  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்ப நிதி, பிரபல திரைப்பட விநியோக நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இவர், உதயநிதி மற்றும் கிருத்திகா தம்பதியின் மூத்த மகனாவார். தற்போது 20 வயதாகும் இன்ப நிதி, ‘இன்பா’ என்ற பெயராலும் பரிச்சயமானவர். வெளிநாட்டில் கல்வி பயின்று வந்த இவர், சமீபத்தில் தமிழகம் திரும்பியதாக கூறப்படுகிறது. கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவரது புதிய பதவியால், தமிழ்த் திரைப்படத் துறையில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

இன்ப நிதியின் தலைமைப் பொறுப்பை ஒட்டி, ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடும் முதல் முக்கியமான திரைப்படமாக ‘இட்லி கடை’ படம் இருக்கிறது. இந்தப் படத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஜ்கிரண், ஆர். பார்த்திபன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்.

 

படத்தினை தனுஷ் எழுதி இயக்கியுள்ளார், இதன் தியேட்டர் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி, தனுஷ் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அதில், இன்ப நிதிக்கு தனது வாழ்த்துக்களையும், படத்தின் வெளியீட்டுக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தைப் பாராட்டியிருந்தார்.

மேலும் சினிமா துறையில் தற்போது அடியெடுத்து வைத்துள்ள இன்ப நிதி, எதிர்காலத்தில் தனது குடும்பத்தின் வழியில் அரசியலிலும் நுழையலாம் எனும் கூற்றுகள் பரவத் தொடங்கியுள்ளன. கடந்த காலங்களில் உதயநிதி ஸ்டாலின், “நடிப்பில் ஆர்வம் கொண்டே இருந்தேன்; அரசியலில் நாட்டமில்லை” எனக் கூறியிருந்தாலும், தற்போது துணை முதல்வராக பதவி வகித்து வருகிறார். அதேபோல இன்ப நிதியும், தனது ஆரம்ப கட்டத்தை சினிமாவில் அமைத்து, பின்னாளில் அரசியலுக்குள் வரலாம் என்ற அதிரடி யூகங்கள் வட்டாரங்களில் கிளம்பியுள்ளன.