மனைவியின் சமூக ஊடக செயல்பாடுகள், குறிப்பாக ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், கணவர் மனைவியை கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம், டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நஜாப்கர் பகுதியில் உள்ள ரோஷன்புரா பகுதியைச் சேர்ந்த அமன் (வயது 35), உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். இ-ரிக்ஷா ஓட்டுநராக பணியாற்றி வந்த அவர், தனது மனைவி மற்றும் 6, 9 வயதுடைய இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்தார்.
அவரது மனைவி சமூக ஊடகங்களில் தீவிரமாக செயல்பட்டு, தொடர் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். அவருக்கு சுமார் 6,000 ஃபாலோயர்கள் இருந்ததாகத் தெரிய வருகிறது. இது குறித்து கணவர் அமன், மனைவியுடன் பலமுறை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், நேற்று அதிகாலை மீண்டும் சண்டை வெடித்தது. அதில், கோபத்துக்குள்ளான அமன், தனது மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் தானும் விஷம் குடித்து, தூக்கில் தொங்கிய நிலையில் தற்கொலை செய்ய முயன்ற அமனை, சம்பவத்தினை அறிந்த போலீஸார் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். தற்போது அவர் போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மனைவியின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
