செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 2 வரை 9 நாள் விழா:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ திருவிழா, இந்த ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள் நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு, 23ஆம் தேதி மாலை அங்குரார்ப்பணம் நிகழ்வு நடைபெறுகிறது. இதில், புற்றுமண் எடுத்து பூஜை செய்து, நவதானிய விதைகள் தூவி வழிபாடு செய்யப்படும்.

ஆழ்வார் திருமஞ்சனம் :

பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, கோவிலில் தூய்மை பணி எனப்படும் ‘ஆழ்வார் திருமஞ்சனம்’ செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவின் ஒவ்வொரு நாளும் உற்சவர் மலையப்பசாமி, கோவிலின் நான்கு மாடவீதிகளில் வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

வாகன சேவைகள் :

விழா நாள்களில் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை பிரமாண்ட வாகன சேவைகள் நடைபெறும். 24ஆம் தேதி மாலை 5.43 மணி முதல் 6.15 மணி வரை மீன லக்னத்தில் கொடியேற்றம் நிகழும். இரவு 9 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் வீதியுலா நடக்கிறது.

தினசரி வாகனங்கள் – அருள் பொங்கும் தரிசனம்:

25ஆம் தேதி சிறிய சேஷ வாகனம், ஹம்ச வாகனம்; 26ஆம் தேதி சிம்ம வாகனம், முத்துப்பந்தல் வாகனம்; 27ஆம் தேதி கல்ப விருட்ச வாகனம், சர்வ பூபால வாகனம்; 28ஆம் தேதி மோகினி அவதாரம் பல்லக்கு மற்றும் மாலை 6.30 மணிக்கு கருட வாகன சேவை நடைபெறுகிறது. இதில் ‘கருட சேவை’ பக்தர்களிடையே மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்தது.

தங்கத்தேரோட்டம் மற்றும் யானை வாகனம்:

செப்டம்பர் 29ஆம் தேதி காலை அனுமந்த வாகன சேவை நடைபெறும். மாலை 4 மணிக்கு தங்கத்தேரோட்டம் மற்றும் இரவு 7 மணிக்கு யானை வாகன சேவை நடைபெறுகிறது. 30ஆம் தேதி சூரிய பிரபை மற்றும் சந்திர பிரபை வாகனங்களில் உற்சவர் எழுந்தருளுவர். இதில் சூரிய சந்திர வாகனங்கள் பக்தர்களிடம் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.

முடிவுநாள் கொடியிறக்கம் – தீர்த்தவாரி சிறப்பு நிகழ்ச்சி:

அக்டோபர் 1ஆம் தேதி காலை தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்தில் வீதியுலா நடைபெறும். 2ஆம் தேதி காலை 6 மணி முதல் 9 மணி வரை புஷ்கரணி தீர்த்தவாரி (சக்கர ஸ்நானம்) நடைபெறவுள்ளது. அதையடுத்து, இரவு 8.30 மணிக்கு கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெற்று, பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

 இந்த விழாவிற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.