அமைதிப் போராட்டத்துக்கு போலீசாரின் கடும் ஒடுக்குமுறை:

தமிழ்நாடு முழுவதும் துப்புரவுப் பணியாளர்கள், தங்கள் வாழ்வாதார உரிமைகளுக்காக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், இதற்கு எதிராக போலீசார் கடும் ஒடுக்குமுறையை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் தடுத்து வைக்கப்பட்டனர். பெண்கள், முதியவர்கள், தினக்கூலிப் பணியாளர்கள் வரை தள்ளப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, பொதுமக்களிடையே பெரும் கோபத்தை தூண்டியுள்ளது. “தொழிலாளர்களுக்கு ஆதரவு” என்ற திமுகவின் வாக்குறுதி வினையாக மாறியுள்ளது.

வாக்குறுதிகள் காகிதத்தில் மட்டுமா?

2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில், துப்புரவுப் பணியாளர்களுக்கு நிரந்தர வேலை, பாதுகாப்பான பணி சூழல் மற்றும் நியாயமான ஊதியம் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், மூன்று ஆண்டுகள் கடந்தும் எந்த ஒரு தீர்வும் வந்ததில்லை. பணியாளர்களின் நிரந்தரப்படுத்தல் கோரிக்கைகள் நீதிமன்ற வழக்குகளில் சிக்கி தேங்கியுள்ளன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பணியாளர்கள் தொடர்ந்து கலக்கத்தில்  இருக்கின்றனர்.

தனியார்மயமாக்கல் கொடுமையா?

மாநகராட்சிகளின் பெரும்பாலான துப்புரவு பணிகள் தனியார் ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனால், தொழிலாளர்கள் வேலை பாதுகாப்பை இழந்திருக்கின்றனர். ஒரு காலத்தில் ₹23,000 சம்பளமாகப் பெற்றவர்கள் தற்போது ₹15,000 சம்பளத்தில் இயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஊதிய உயர்வு, நிரந்தரமயமாக்கல் உள்ளிட்ட கோரிக்கைகள் மீண்டும் மீண்டும்  ஒதுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, “மக்கள் நல அரசு” என்ற திமுகவின் வாசகம் கேள்விக்குறியாகியுள்ளது.

எடப்பாடியின் கடும் விமர்சனம்:

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, “திமுக எதிர்க்கட்சியில் இருந்தபோது சிறு பிரச்சனைகளுக்கும் பறைச்சாற்றியது. இன்று ஆட்சியில் இருப்பவர்கள் உண்மையான தொழிலாளர் பிரச்சனைகளுக்கு காவல்துறையைக் களமிறக்குகிறார்கள்” என கடுமையாக சாடினார். 13 நாட்கள் நீடித்த போராட்டத்தில் அரசு எந்த பேச்சுவார்த்தைக்கும் வராதது குறித்து விமர்சனங்கள் வலுத்துள்ளன. “தேர்தலுக்கு முன் ஒரு முகம்… ஆட்சிக்கு பின் மற்றொரு முகம்” என்ற பழனிசாமியின் குறிப்பு சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது.

கண்துடைப்பாக நலத்திட்டங்கள்?

போராட்டத்துக்குப் பிறகு அரசு சில நலத்திட்டங்களை அறிவித்தது. இலவச காலை உணவு, வீடு மற்றும் காப்பீட்டு பாதுகாப்பு போன்றவை. ஆனால், பணியாளர்களின் முதன்மை கோரிக்கை – நிரந்தர அரசு வேலை – தொடர்ந்து தவிர்க்கப்பட்டதே பலரிடமும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சங்கத் தலைவர்கள், “மையப்பிரச்சினையைத் தவிர்த்து சில  திட்டங்களை அறிவிப்பது கண்துடைப்பு மட்டுமே” என்று வலியுறுத்துகின்றனர்.

சென்னை மாநகரத்தின் வீழ்ச்சி – மக்கள் அவலம்:

இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் தூய்மை நிலை குறைந்திருப்பது மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தினமும் 6,500 டன் குப்பை உருவாகும் நிலையில், வீடு வீடாக சேகரிக்கப்படும் அளவு பாதியாகவே உள்ளது. பொது கழிப்பறைகள் செயல்படும் வீதம் 33 சதவீதமாக குறைந்துள்ளது. ஸ்வச் சுர்வேக்ஷன் தரவரிசையில் சென்னை 38வது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்தூர் மாநகரம் 7 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றிருப்பதைக் கருத்தில் கொண்டால், சென்னை மாநகரத்தின் தற்போதைய நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது. “சென்னையை சுத்தமாக்க தனியார்மயமாக்கலே வழி” என மேயர் பிரியா கூறினாலும், அதன் விளைவுகள் தற்போது மக்கள் வாழ்வையே பாதிக்கின்றன.